சட்டம் உங்கள் சட்டையை போல் அல்ல..! நடிகர் சூர்யாவின் ட்விட்-க்கு காயத்ரி பதிலடி..!

நடிகர் சூர்யாவிற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை காயத்ரி ரகுராம்..!

சட்டம் உங்கள் சட்டையை போல் அல்ல..! நடிகர் சூர்யாவின் ட்விட்-க்கு காயத்ரி பதிலடி..!
புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள ஒளிப்பதிவு வரைவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு தற்போது புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் தணிக்கை செய்யப்படும் ஒரு படத்தை, மத்திய அரசு தடை செய்ய அனுமதி அளிக்கும் படியான வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவால் சான்றிதழ் வழங்கப்படாத படங்கள் தீர்ப்பாயத்திற்கு சென்று போராடி சான்றிதழ் பெற முடியும். ஆனால் இந்த புதிய சட்ட வரைவில் அந்த தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு, மத்திய அரசால் ஒரு குழு நியமிக்கப்படுகிறது. இந்த குழுவிற்கு தணிக்கை செய்யப்பட்ட படங்களை நீக்க அனுமது அளிக்கப்படுகிறது. இதனால் சினிமா துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலும் குறிப்பிட்ட கருத்துகளை மட்டுமே படமாக்க முடியும் என்பதாலும், திரைப்பிரபலங்கள் புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”சட்டம் மக்களை காக்க வேண்டும், குரல் வளையை நெரிக்கக் கூடாது” என பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல எனவும், கருத்து சுந்தந்திரம் நமக்கு தேவை, ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க, அதனை தவறாகப் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். 

உதராணமாக, நீங்கள் மோடிஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், இந்தியாவிற்கும், மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் என பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை எனவும், பஞ்ச் டயலாக்கிற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள் எனவும் கூறியுள்ளார். இது திரைப்படத்துறையை எந்த வகையில் பாதிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர், விசில் மற்றும் கைத்தட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல என்றும், தேச பாதுகாப்பு முக்கியம் , தேசப்பக்தி முக்கியம் உண்மை முக்கியமானது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கார்த்திக் சுப்புராஜ்க்கும், காயத்ரி பதிலடி கொடுத்திருக்கிறார். எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை எனவும், உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும், 4 சென்டிமென்ட் காட்சிகளும், 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள், வேறு எதுவும் இல்லை, இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.