ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு திமுக ஒப்புதல்:ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு திமுக ஒப்புதல்:ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் பொருட்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டதற்கும், ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி

 அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி குழு கூட்டத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத வரியும், நெய் மீது 12 சதவீதம் வரி விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 18 ஆம் தேதி முதல் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 

 இந்த விலை உயர்வின் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது மக்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களான தயிர், மோர், நெய், லஸ்ஸி ஆகியபொருட்கள் மீது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை ஆவின் நிறுவனம் விதித்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலை

 அரை லிட்டர் பாக்கெட் தயிர் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் மோர் பாக்கெட் விலை எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் 45 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 திமுக மீது விமர்சனம்

 ஆட்சியில் இல்லாத போது எந்த பொருட்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் விதிக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டாலும் உடனடியாக குரல் எழுப்பி வந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டும் என்று ஜி.எஸ்.டி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஒப்புதல் அளித்திருப்பது திமுகவின் இரட்டை வேட்த்தை தோலுரித்து காட்டுவது போல அமைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 பொது மக்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் பொருட்கள் மீதான வரி உட்பட, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரியையும் திரும்பப் பெற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்.