சசிகலா வெளியிடப்போகும் அந்த வீடியோ..! அரண்டு போய் வெட வெடப்பில் இருக்கும் அதிமுக தலைமை..!

என்ன வீடியோவாக இருக்கும்? குழப்பத்தில் மக்கள்..!
சசிகலா வெளியிடப்போகும் அந்த வீடியோ..! அரண்டு போய் வெட வெடப்பில் இருக்கும் அதிமுக தலைமை..!

செல்போனில் மட்டுமே உரையாடி அதிரவைத்தவர், வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுவதால், அதிமுகவினர் கதிகலங்கி போயுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா நடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். உடல் நலக் குறைவால் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என அனைவரும் எண்ணிய நேரத்தில், அதிமுக தேர்தலில் தோல்வியை தழுவியதால், மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவேன் என அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் போன் போட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். 

இப்படி தொண்டர்களிடம் பேசுவதை அவருக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், வெளிப்படையாக சமூகவலைதளங்கள் வாயிலாக வெளியே பரவவும் விட்டார். இதனால் அதிர்ந்து போன அதிமுக தலைமை செய்வதறியாது திகைத்து உள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பின்னாளில் அதிமுக பொதுச்செயலாளராக இருக்க கூடாது என நீதிமன்றம் வரை சென்றது இவரது வழக்கு. அந்த வழக்கு தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. இவரால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைக்கோர்த்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி, அவருக்கு எதிராக மேடைகளில் பேசி வந்தார். 

இப்படி ஆடியோ மூலம் மட்டுமே அதிமுகவை மிரளவைத்தவர், அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டியும் அளித்தார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பலவும் பேசு பொருளாக மாறின. இருப்பினும் நம்மைப் பற்றி எதுவும் பேசவில்லை என்பதாலும், எவ்வித அட்டாக்கும் இல்லை என்பதாலும் நிம்மதியாக இருந்தனர் அதிமுகவினர். இதற்கிடையில், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளாததால், டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி, அப்போது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் சசிகலா இடையில் புகுந்து அந்த பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்படைத்தது நாம் அனைவரும் அறிந்ததே. அதேப் போல, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானமும் செய்து, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே கூட இருந்ததாகவும், யாரையும் உள்ளே கூட நுழைய விடாமல் தடுத்ததால், அங்கு ஏதோ மர்மம் நிலவுவதாகவும் குற்றம்சாட்டியதும் நாமக்கு தெரியும்.

அந்த நேரத்தில் திடீரென மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்தவாறு ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வம் கூறிய மர்மம் ஏதும் இங்கு நடக்கவில்லை என்பதை நிரூபணமாக்கியது இந்த வீடியோ. ஒரு வகையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற இந்த பேருதவியாகவும் இருந்தது. 

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது, பல கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விடுத்தது அதிமுக தலைமை. சசிகலாவுடன் செல்போனில் உரையாடியவர்களை கட்சியிலிருந்து தூக்கினர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது, சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும் ஒரு சேர ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு மதுசூதனனின் மறைவுக்கு வந்தவர் சைலண்டாக மலர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்று விட்டார். இருந்தாலும், அங்கிருந்தவர்களுக்கு நிச்சயம் வயிற்றை கலக்கியிருந்தாலும் சொல்லுவதற்கு இல்லை. 

இப்படி சசிகலாவை அதிமுகவினர் முற்றிலும் ஓரங்கட்டி வரும் நிலையில், மேலும் ஒரு முக்கிய வீடியோவை சசிகலா தரப்பினர் வெளியிடவுள்ளதாகவும், இதன் மூலம் சசிகலா மீதான குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து, மீண்டும் அதிமுகவை கைப்பற்ற் உதவும் என சசிகலா நம்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிலும் பெண் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்டித் தரும் என்பதால் கடைசி ஆயுதமாக இந்த வீடியோவை வெளியிடக் கூடும் என்பதுதான் அரசியல் களத்தில் பேச்சாக இருக்கிறது.சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிழல் போல இருந்து சேவை செய்தார், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் கிடையாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை உருவாக்குவதற்கு இந்த வீடியோ பயன்படும் என்கிறார்கள். 

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் நடைமுறையில் வருமா அல்லது பேச்சுக்களாக கரைந்துபோகுமா என்பதுதான் தெரியவில்லை. மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு தளர்வான நிலையில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அல்லது வீடியோவை வெளியே காட்டுவது அவர் கட்டிக்காத்து வந்த இமேஜுக்கு பின்னடைவு, எனவே அதை சசிகலா செய்யமாட்டார், அவ்வாறு செய்தாலும் அது சசிகலாவுக்கு ஆதரவாக போகாமல் நெகட்டிவாக போகவும் வாய்ப்பும் இருக்கிறது என்று சிலர் சொல்வதையும் பார்க்கமுடிகிறது. எது எப்படி இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com