வீட்டை காலி செய்யாத தனபால்.,வீடில்லாத சபாநாயகர்.! தர்மசங்கடத்தில் ஸ்டாலின்.! 

 வீட்டை காலி செய்யாத தனபால்.,வீடில்லாத சபாநாயகர்.! தர்மசங்கடத்தில் ஸ்டாலின்.! 

சென்னை கீரின்வேஸ் சாலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் உள்ளன. இங்கு தான் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் குடும்பத்துடன் தங்குவார்கள். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களில் தான் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியிலிருந்ததால் அதிமுக அமைச்சர்கள் இங்கு தங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வரவும், புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களையும் காலி செய்தனர்.

இதில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அவர் இதுவரை தங்கியிருந்த பங்களாவில் தொடர்ந்து வசிக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்தது. காரணம் எதிர்க்கட்சி தலைவர் பதிவு என்பது கேபினட் அந்தஸ்துக்கு இணையானது என்பதால் அவர்களுக்கும் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படும். ஆனால் எடப்பாடி இத்தனை வருடம் தங்கியிருந்த அதே பங்களாவை திமுக அரசு அவருக்கு ஒதுக்கியது பல்வேறு தரப்பில் பாராட்டைப் பெற்றது. 

இந்நிலையில், தற்போது சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள அப்பாவுக்கு அரசு பங்களா இன்னும் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் இன்னும் தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. உடனே அரசு பங்களாவை காலி செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் பங்களாவை காலி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு வீடு ஒதுக்கீடு செய்யமுடியாமல் முதல்வர் ஸ்டாலின் தர்மசங்கடத்தில் இருக்கிறாராம். 

விரைவில், சட்டமன்றத்தில் மான்ய கோரிக்கை பட்ஜெட் துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சபாநாயகருக்கே குடியிருக்க வீடு இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மேலும் , ஆட்சி முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் அதிமுகவினர் அரசு இல்லங்களை காலி செய்யாததும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com