பெட்ரோல் விலை குறைப்பு எப்போது?

தமிழகத்தில் நிதிநிலை சீரானதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
பெட்ரோல் விலை குறைப்பு எப்போது?

தமிழகத்தில் நிதிநிலை சீரானதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போளூர் தொகுதி எம்எல்ஏ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்ததாகவும், ஆனால் அதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மற்றும் ஆளுநர் உரையில் அதுதொடர்பான விவரம் இடம்பெறாதது ஏமாற்று வேலை இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்ததாக தெரிவித்தார்.  ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, பெட்ரோல் மீதான வரியை 28 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியதாகவும், அதன்பின்னர் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக கடந்த 2006ல், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக 3 முறை பெட்ரோல் மீதான வரியை குறைத்ததாகவும் சுட்டிக்காட்டினார். 

அதுமட்டுமல்லாது 2014ம் ஆண்டு, பொறுப்பேற்றுக்கொண்ட தற்போதைய ஒன்றிய அரசு, பெட்ரோல் மீதான செஸ் வரியை 9 ரூபாய் 48 காசுகளிலிருந்து 21 ரூபாய் 48 காசாக உயர்த்தியதாகவும் தெரிவித்தார். 

ஆனால் அந்த வரியில் வெறும் 4 சதவீதத்தை மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு, மீதம் உள்ள 96 சதவீதம் வரி பயனை ஒன்றிய அரசு  எடுத்துக்கொள்வதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும் செஸ் வரி எதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்கு அதனை பயன்படுத்தாமல், மறைமுகமாக ஒன்றிய அரசே அதனை எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார். 

இதனிடையே ஜிஎஸ்டி வரியில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதி நிவாரணத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை எனவும் பழனிவேல் தியாகராஜன் கவலை தெரிவித்தார். 

இதனால் மாநிலங்களுக்கு வட்டிச்சுமை கூடுதலாக உள்ளதாகவும் அவர் விளக்கினார்.  எனவே தற்போதைய நிதி நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்றும், மாநிலத்தில் நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்படும் எனவும் பழனிவேல் தெளிவுப்படுத்தினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com