சசிகலாவிற்கு சாதகமாகுமா இபிஎஸ்-ன் வாதம்..?

சசிகலாவிற்கு சாதகமாகுமா இபிஎஸ்-ன் வாதம்..?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடைபெற்று வரும் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஒற்றைத் தலைமை கோரிக்கை

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கோரிக்கை இபிஎஸ் ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. கட்சியில் இரட்டைத் தலைமை நிலவுவதால் உடனுக்குடன் எந்தவொரு முடிவும் எட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால் கட்சியில் ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் கட்சி திறம்பட செயல்பட முடியும் எனக் கூறப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூடவிருந்த நிலையில் இந்த முழக்கம் மேலும் வலுவடைந்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பதறியது.

நீதிமன்றத் தலையீடு

அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக ஈபிஎஸ் செயல்படுவதாக கூறி, ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழுவை தடை செய்யக் கோரி நீதிமன்றத்திற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் பொதுக்குழுவைத் தடை செய்ய முடியாது எனவும் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனையோடு தீர்ப்பு வழங்கியது.

ஜூன்-23 பொதுக்குழுவில் அதிகரித்த பிளவு

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு ஜூன் 23 அன்று நடந்தது. ஆனால் அந்தப் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். கட்சியின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையையே விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அந்தக் கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழு ஜூலை-11 நடைபெறும் எனவும் ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படும்  அறிவிக்கப்பட்டது.

ஜூன் 24 அன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்ட அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு ஒப்புதல் பெறாததால் காலாவதியாகிவிட்டதாக அறிவித்தார்.

தொடரும் நீதிமன்ற விவாதம்

இதை மறுத்த ஓபிஎஸ் தரப்பு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிப்பதாகத் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. மேலும், இபிஎஸ் தரப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு என்ற மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த பின்னணியில், ஜூலை 11 அன்று நடைபெறும் பொதுக்குழுவைத் தடைசெய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை ஜுலை 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெற்றது. ஜூலை 7 அன்று இபிஎஸ் தரப்புக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா, எதனடிப்படையில் அடுத்த பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளது என் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஜூலை 8 அன்று பதிலளிக்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி.

இதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்-க்கு எதிராக கட்சி நிர்வாகிகள் உள்ளனர். அதிமுகவின் 2442 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்தனர். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. இருவரால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக செயலாளர்கள் காலியிடம் நிரப்பப்படும் வரை செயல்படுவார்கள். இடையூறின்றி அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்க வேண்டும் என பதிலளித்தனர். ஜூலை 11 அன்று காலை 9 மணிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி அன்றைய தினமே ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என உத்தரவிட்டார். 

ஈபிஎஸ் சொல்லும் காரணங்கள் சரியா?:

இந்தச் சூழலில் முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால் உட்கட்சித்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள்,பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வை பொதுக்குழு ஏற்கவில்லை என்பது இபிஎஸ் தரப்பு வாதம் எனில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு ஜூலை-11 அன்று நடக்கவிருக்கும் பொதுக்குழு முடிவுகள் எப்படி கட்சியைக் கட்டுப்படுத்தும்.

அப்படி ஒரு வாதம் ஓபிஎஸ் தரப்பால் முன்வைக்கப்பட்டாலோ அல்லது அந்தப் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தாலோ இதன் மூலம் பொதுக்குழுவும் செல்லாததாகிவிடுகிறது. அப்படி காலாவதியான பொதுக்குழு பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் உரிமையையும் இழந்துவிடுகிறது.

அஇஅதிமுக பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை - 11 அன்று காலை 9 மணிக்கு பொதுக்குழு குறித்த தீர்ப்பும் வெளியாகவுள்ளதால் இந்தத் தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.