கூகிள் பே மூலம் லஞ்சம்..! தலைமைக் காவலர் பணி இடமாற்றம்..!

கூகிள் பே மூலம் லஞ்சம்..!   தலைமைக் காவலர் பணி இடமாற்றம்..!

புழல் சிறையில் உள்ள கேன்டீனில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஜிலன்ஸ் தலைமைக் காவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது..

சென்னை புழல் சிறைக்காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்(36). இவர் சென்னை புழல் மத்திய சிறை இரண்டில் விஜிலென்ஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

புழல் சிறை ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்த இவர், பின்னர் அயல் பணியாக புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள கேன்டீனில் விஜிலன்ஸ் காவலர் ராஜேஷ் மாதம், மாதம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இதனையடுத்து புழல் சிறை விஜிலன்ஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காவலர் ராஜேஷ் கேன்டீனில் இருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவலர் ராஜேஷை புழல் சிறை 2 விஜிலன்ஸ் பிரிவில் இருந்து சிறை 1-க்குப் பணி மாற்றம்  செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறைக் காவலர் ராஜேஷிடம் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏற்கெனவே புழல் சிறையில் உள்ள கேன்டீனில் டீ, காபி - 50 ரூபாய், சிக்கன் பிரியாணி - 700 ரூபாய், பீடிக் கட்டு - 400 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,  விஜிலன்ஸ் தலைமைக்காவலர் கேன்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  | இஸ்ரேல்- ஹமாஸ் போர்: சமரச பேச்சுவார்த்தைக்கு பின், பணயக் கைதிகள் விடுவிப்பு..!