ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...!

ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். சச்சின் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் குற்ற செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டுவதாக சோமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாம்பரம் - சோமங்கலம் செல்லும் சாலையில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வந்தனர். அந்த சோதனையின் போது சோமங்கலம் நோக்கி பைக்கில் வந்த சச்சின் மற்றும் அவரது கூட்டாளியான பரத் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

அப்போது பரத் தப்பிய நிலையில் சச்சினை மடக்கி பிடிக்க முற்பட்டபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஒருவரை தாக்கி விட்டு, நாட்டு வெடிகுண்டை காவல்துறையினர் மீது வீசி தாக்கமுற்பட்டார். இந்த சர்ச்சையின் போது தற்காப்பிற்காக சச்சினின் காலில் காவல் ஆய்வாளர் துப்பாக்கி மூலம் சுட்டு அவரை கைது செய்தனர். மேலும் சச்சினிடமிருந்து கத்தி, அரிவாள், நாட்டு வெடிகுண்டுகள் இரண்டு கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ரவுடி சச்சினிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் இரண்டையும் சோமங்கலம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தீயணைப்புத் துறையினர் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் காவல் உதவி ஆணையர் ரவி, சோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் மிகப்பெரிய பள்ளம் தோண்டி பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர்.

இதையும் படிக்க : வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. ரூ.83-ஐ தாண்டி சென்றதால் நிபுணர்கள் அதிர்ச்சி..!