பொய் போக்சோ; வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து; நீதிமன்றம் அதிரடி!

பொய் போக்சோ; வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து; நீதிமன்றம் அதிரடி!

வழக்கறிஞருக்கு எதிராக அளிக்கப்பட்ட பொய் புகாரில் பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பார்த்தசாரதி, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை அவதூறாக பேசி, துப்பட்டாவை பிடித்து இழுத்ததாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பதிவான வழக்கில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்தசாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பார்த்தசாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, புகார் கொடுத்த பெண்ணின் கணவர் வீட்டு மாடியில் சூதாட்டம் விளையாடியது மற்றும் சாலையில் கழிவு நீரை வெளியேற்றியது குறித்து, மனுதாரரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்ததால், பழவாங்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் மட்டும் அல்லாமல், போக்சோ சட்டத்திலும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

பின்னர் நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில், சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்நோக்கத்துடன் பொய் வழக்கு போடும்போது, அந்த வழக்கை ரத்து செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் பார்த்தசாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்க:கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீதான கருத்து கேட்பு கூட்டங்கள் ஒத்திவைப்பு!