கல்லூரி மாணவியுடன் ஆபாச சாட்டிங்... பேராசிரியரை பணிநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம்...

கோவை அருகே வரும் அரசு உதவிபெறும் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியுடன் ஆபாசமாக சாட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் வெளியான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவியுடன் ஆபாச சாட்டிங்... பேராசிரியரை பணிநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம்...

கோவை பேரூர் பகுதியில் அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாகக் செய்த டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில்  "வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப கிளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம் என இரவு 9.30 மணிக்கு மேல் பேராசிரியர் திருநாவுக்கரசு பேசுவது போன்ற பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் யாராவது அருகில் இருக்கிறார்களா? என பேராசிரியர் திருநாவுக்கரசு கேட்பது போன்றும், அதற்கு அந்த மாணவி தன் அருகில் யாரும் இல்லை என்று கூறியவுடன், திருநாவுக்கரசு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்ஃபீ எடுத்து அந்த மாணவிக்கு அனுப்பியதுடன், இதேபோல நீயும் போட்டோ எடுத்து அனுப்பு என்று கூறுவது போன்றும் ஸ்கிரீன் ஷாட்டில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களை காண்பித்து பேராசிரியர் திருநாவுக்கரசிடம் மாணவர்கள் விளக்கம் கேட்பது போன்றும்,  முதலில் குழப்ப முயற்சி  செய்து பின்பு தான் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளதை உணர்ந்து ஒப்புக் கொள்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆபாச ஷார்ட் குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களை மாணவர்கள் வெளியிடும் பட்சத்தில் தான் தற்கொலை செய்துகொள்வதாக உணர்வு ரீதியில் பேராசிரியர் திருநாவுக்கரசு மிரட்டுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்வந்த  பாலியல் புகாரினால் தான் திருநாவுக்கரசு அவர்களின் மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவருக்கு அனுப்பிய ஆபாச சாட்கள் வெளியாகி 10 நாட்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்த சூழலில் இன்று காலை பாதிப்புக்குள்ளான மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பாக மாணவர்கள் திரண்டு பேராசிரியர் திருநாவுக்கரசை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், மாணவிகளின் அறியாமையையும் ஏழ்மையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் காமப் பசியை தீர்த்துக் கொள்ளும் இது போன்ற குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற அப்பாவி மாணவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.