பணம் வைத்து சூதாடியவர்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு; இருவர் கைது!

கொடுங்கையூரில் பணம் வைத்து சூதாடியவர்களை மிரட்டி நகை பணம் பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மூலக்கடை வெங்கடேஸ்வர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் 37. இவர் மற்றும் இவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொடுங்கையூர் மேற்கு இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வழக்கமாக பணம் வைத்து சீட்டு ஆடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு சீட்டு ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஐந்திற்கும் மேற்பட்ட கும்பல், சீட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக தாக்கி ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 1/2 சவரன் தங்க நகை 3 செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ். ரவி உள்ளிட்டோர் கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கொடுங்கையூர் குற்றப்பிரிவு  போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஏற்கனவே அஜய் புத்தா, நரேஷ் குமார் என்கின்ற குரு, பிரேம்குமார், பரத், நவீன், யுவராஜ், பிரசாந்த் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த சோபனா என்ற சௌபாக்கியவதி 39 மற்றும் பாரிமுனை பகுதியைச் சேர்ந்த ரகுமான் 38 ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். அவர்கள் இருவரையும் நேற்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட சௌபாக்கியவதி வழக்கமாக ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பணம் வைத்து சூதாடும் இடத்தில் இவரும் பணம் வைத்து சூதாடுவது வழக்கம். ஆனால், சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் சௌபாக்கிய வதியை சீட்டு ஆட வர வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சௌபாக்கியவதி ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரகுமானிடம், "குறிப்பிட்ட இடத்தில் நிறைய பணம் வைத்து சீட்டு ஆடுகிறார்கள். அங்கு சென்று அவர்களை அடித்து பணம் பறித்தால் இது குறித்து அவர்கள் போலீசிடம் போக மாட்டார்கள்" எனக் கூறி இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து ரகுமான் மற்றும் சௌபாக்கியவதி மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!