போலி ஆவணங்கள் மூலம் பல கோடி கடன் பெற்று மோசடி... வங்கி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம்...

சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரங்களில் இரண்டு வங்கி ஊழியர்கள் உட்பட ஒன்பது பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் பல கோடி கடன் பெற்று மோசடி... வங்கி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம்...

போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்வது தொடர்பான புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் குவிந்த வண்ணம் உள்ளன. வங்கிகளில், வீட்டுக் கடன், தொழில் கடன் ,தனிநபர் கடன், வாகன கடன் ஆகிய கடன்களை பெறுவதற்கு பல்வேறு படி நிலைகளில் ஆவணங்களை சமர்ப்பித்து பல ஆய்வுக்குப் பிறகுதான் வங்கிகள் கடன் வழங்குகின்றன. இதனால் பலருக்கும் எளிதில் கடன் கிடைப்பதில்லை. இதனை அறிந்துகொண்ட மோசடி கும்பல்கள் வங்கிகள் ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு போலி ஆவணங்களை தயார் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இதற்கு வங்கி ஊழியர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் உள்ள புகார்களை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் பட்டியலிட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 5 வங்கிக் கிளைகளில் அதன் கிளை மேலாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் ஒன்பது பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக கைதான ஒன்பது பேரில் இரண்டு பேர் வங்கி ஊழியர்கள் ஆவர்.

சென்னை இராஜாஜி சாலையில் உள்ள எச்எஸ்பிசி என்ற தனியார் வங்கியின் கிளை மேலாளர் லைசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வங்கி ஊழியர் , கடன் வாங்கிய நபர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். குறிப்பாக ஐ வி சப்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி பிரித்திவிராஜ் என்பவருடன் கூட்டாக சேர்ந்து வங்கி ஊழியர் நஜிமுதீன் , போலி ஆவணங்கள் மூலம் ,போலி நபர்களின் பெயரில் நாற்பத்தி நான்கு வங்கிக் கணக்குகளை துவங்கியுள்ளார். அதில் 15 பேருக்கு தனிநபர் கடன் அளிக்கப்பட்டதாக மோசடி செய்துள்ளார். சுமார் ஒரு கோடியே ஐம்பத்தி ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து நஜுமுதீன் மற்றும் பிரித்திவிராஜ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி பொது மேலாளர் முருகன் என்பவர் கொடுத்த புகாரில் மேடவாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியின் கிளை மேலாளர் பாலாஜி என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சியாமளா தேவி என்ற பெண்ணுக்கு போலி ஆவணங்கள் மூலம் வீட்டு கடன் வாங்கி கொடுத்த விவகாரத்தில் மோசடி செய்ததாக பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி , நுங்கம்பாக்கம் கரூர் வைசியா வங்கி, விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் , தனித்தனியாக 3 வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

குறிப்பாக கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் வீட்டுக் கடன் மற்றும் மாடன் ரைஸ் மில் வாங்குவதற்கு எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த திருவள்ளூரை சேர்ந்த முத்துவேல் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி  வீட்டுக் கடன் வாங்கிய விவகாரத்தில், தனியார் நிறுவன பெண் உரிமையாளர் மிராக்கிளின் டோரிஸ், அவரது கணவர் தங்கராஜ், மற்றும் கோவிந்தராஜ் சையது அலி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற முயற்சித்ததாக நாடுகளைச் சேர்ந்த முகமது கனி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று வங்கியில் மோசடி செய்து கைதான 6 பேரும் சுமார் 4 கோடி அளவில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இவ்வாறாக ஐந்து வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்த இரண்டு வங்கி ஊழியர்கள் ஒரு பெண் உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்று கோடிக்கணக்கில் கடன் வழங்கும்போது வங்கி மேலாளர்கள் கவனமாக ஆவணங்களை ஆய்வு செய்து கடன் வழங்குமாறு மத்திய குற்றப்பிரிவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஐந்து வங்கிகளில் நடந்த வங்கி மோசடியை உடனடியாக புலன் விசாரணை செய்து கண்டுபிடித்த மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு காவலர்களுக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com