யுவன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு...! 6 பேர் படுகாயம்...!

யுவன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு...! 6 பேர் படுகாயம்...!

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில், யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே அங்கு ஏராளமானோர் கூடினர். மேலும் நேற்று மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜ மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். சுமார் 10,000 பார்வையாளர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் கல்லூரி நிர்வாகம் நுழைவு வாயிலை மூடியதாக அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூன்று மாணவிகள் நெரிசலில் சிக்கி காயமடைந்தனர். ஒரு பெண் உதவி காவல் ஆய்வாளரும் படுகாயமடைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக அங்குள்ள சிறிய சுவர் இடிந்ததில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து, இந்த நிகழ்வை நடத்துவதற்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவும் இல்லை, அனுமதி மறுக்கவும் இல்லை என்றும் தேவையான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சரிவர செய்யவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலுக்குப் பிறகும், நிகழ்ச்சி நிறுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். 

-- சுஜிதா ஜோதி