கார்ஃபைட் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.... எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!

கார்ஃபைட் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.... எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!

திண்டுக்கல்லில் சட்ட விரோதமாக கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகரில் உள்ள மாம்பழ குடோன்களில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 300 கிலோ வேதி பொருட்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்பொழுது மாம்பழ சீசன் ஆரம்பமாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, சேலம், உட்பட பல மாவட்டங்களில் இருந்து கல்லாமை, காசாலட்டு, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரம், சப்பட்டை, இமாம் பசந்து உட்பட பல வகை மாம்பழங்கள் தற்பொழுது திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.  விரைவாக மாம்பழங்கள் பழுக்க வேண்டும் என்பதற்காக வியாபாரிகள்
குடோன்களில்  செயற்கையாக  ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையில் தனிப்படை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்சனர் காம்பவுண்டில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வின் போது கார் ஃபைட் என்ற வேதியல் கற்களை கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.  அவற்றை பறிமுதல் செய்தனர்.  ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில் மட்டும் 300 கிலோ வேதியல் பொருட்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

இதேபோல் 6 மாம்பழ கடை  உரிமையாளர்களுக்கு தலா 3000 வீதம் 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  இனிவரும் காலங்களில் இது போன்ற ரசாயன பொருட்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

இதையும் படிக்க:  நீலகிரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா...!!!