சேலம் : பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறை சோதனை...! இரண்டாவது நாளாக தொடர்கிறது...!

சேலம் : பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறை சோதனை...! இரண்டாவது நாளாக தொடர்கிறது...!

சேலம் டிவிஎஸ் ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி விற்பனையில் வரி எய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் கிடைத்துள்ளது. இதை அடுத்து சென்னை, சேலம்  மற்றும் கோவையைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் புகாருக்குள்ளான  ஜவுளிக்கடையில் திடீரென சோதனை நடத்தினர். 

பின்னர் ஜவுளிக்கடையிலிருந்து ஊழியர்கள் யாரையும் வெளியேறவும் விடாமல் வெளியில் இருந்த யாரையும் உள்ளேயும் அனுமதிக்காமல் கடையின் ஷட்டர் பாதி நிலையில் பூட்டப்பட்டது. மேலும் கடை நிர்வாகிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த இருப்பு ஆவணங்கள், விற்பனை ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்களையும் ஆய்வு செய்த சோதனை இரவு வரை நீடித்தது. 

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரி துறையினரின் இந்த அதிரடி சோதனை, முடிவுக்கு வந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஜவுளி கடையில் எவ்வளவு வரி எய்ப்பு நடைபெற்றுள்ளது என்பது குறித்தான முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : வழக்கை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்த தீட்சிதர்கள்...