கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற மூன்று பேர்...! விஷ வாயு தாக்கி பலி....!

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற மூன்று பேர்...! விஷ வாயு தாக்கி பலி....!

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சத்தியம் கிராண்ட் எனும் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன்(51) , நவீன்குமார்(30), திருமலை(18) ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி சுமார் 30அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு விழுந்து சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஶ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15அடி அளவிற்கு கழிவு நீரை இரைத்தனர்.  ஆனால் மூவருமே அந்த கழிவு நீரின் சகதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. அந்த மூவரின் உடல்களையும்  தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் இது குறித்து தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி, மேலாளர் முரளி ஆகியோர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஒப்பந்ததாரர் ரஜினி மற்றும் மேலாளர் முரளி ஆகியோரை ஶ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்தனர்.கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றபோது விஷ வாயு தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் கட்சிப்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.