களைகட்டிய சிவகங்கை மீன்பிடித் திருவிழா!

களைகட்டிய சிவகங்கை மீன்பிடித் திருவிழா!

சிவகங்கையில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஆயிர கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஏராளமான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

காளையார்கோவிலை அடுத்துள்ளது வெற்றியூர் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மருதுடைய அய்யனார் கோவில் வாயிலில் அமைந்துள்ளது பெருவஞ்சி கண்மாய். இந்த கண்மாயின் மூலம் 85 ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெருகிறது. இந்த ஆண்டு விவசாய காலம் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்ல அனுமதிப்பதே கிராமத்தில் வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இன்று கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் கொடுங்குளம், புதுவெட்டி, சாத்தரசன்பட்டி, காளக்கண்மாய், கருஙகுளம், வாவாரி உள்ளிட்ட பல்வேறு கிராமஙகளை சேர்ந்த ஆயிர கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். 

கிராம பெரியவர்கள் துண்டை அசைத்து இசைவு தெரிவித்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் விரால், கெளுத்தி, கெண்டை, சிலேபி, ரோகு, கட்லா, உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கிய நிலையில் அதனை கிராம மக்கள் மகிழ்ச்சியாக அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் மீன்களை பிடித்த சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.