உணவக கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு... விவசாயிகள் புகார்...

பல்லடம் அருகே குளம் தேங்கியுள்ள உணவக கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உணவக கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு... விவசாயிகள் புகார்...

திருப்பூர் | பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூர் அருகே வசித்து வருபவர் விவசாயி வாசு. இவர் தனக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கரில் வாழை சாகுபடி செய்தும் கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவரது விவசாய நிலத்துக்கு அருகில் குளம் போல் தேங்கிய சாக்கடை கழிவுநீரில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து இந்த கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்பதை சக விவசாயிகள் சிலருடன் சென்று பார்த்துள்ளார்.

அப்போது மாதப்பூர் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாராபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான அபூர்வா என்ற ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தான் இந்த சூழலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இன்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலரும் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இதில் அபூர்வா ஹோட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் வழியாக அங்குள்ள நீர் ஆதார ஓடை வழியாக சென்று விவசாயி வாசுவின் விலை நிலத்தின் அருகே குளம் போல் தேங்கி இருப்பதும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கழிவு நீர் தேங்கி இருப்பதன் காரணமாக நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாக பாதிப்படைந்து இருப்பதன் காரணமாக கால்நடைகள் தண்ணீர் அருந்த மறுப்பதாகவும் ரசாயனம் கலந்த துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் தங்களது கிணற்று நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இந்த ரசாயனம் கலந்த நீரானது கிணற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு வாழை மரங்களுக்கு பாய்ச்சப்படுவதால் மரங்கள் காய்ந்து போவதாகவும் வருத்தம் தெரிவித்த விவாயிகள் சம்பந்தப்பட்ட அபூர்வா ஹோட்டல் உரிமையாளர் கமலக்கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com