இறந்த மனைவி, இயேசு போல உயிர்த்தெழுவார் என நம்பிய கணவர்...
மதுரை மாவட்டத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்யாமல் 3 நாட்களாக வீட்டிலேயே வைத்துள்ளார் கணவர்.. இயேசு கிறிஸ்துவைப் போல மனைவியையும் பிரார்த்தனை மூலம் உயிர்ப்பிக்க முடியும் என நம்பிய முதியவரின் பரிதாப நிலையை காணலாம் இந்த செய்தித் தொகுப்பில்..

மதுரை : எஸ்.எஸ்.காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். 64 வயதான இவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஜெய்சங்கர் மற்றும் சிவசங்கர் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
மகன்கள் இருவருமே மருத்துவத்துறையில் உயர்ந்து விளங்கிய நிலையில் பாலகிருஷ்ணனின் குடும்பம் சில மாதங்களுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பாலகிருஷ்ணனின் மனைவி மாலதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதியன்று உயிரிழந்தார்.
மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் காப்பாளர்கள் மீது தாக்குதல்...
மனைவி உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத பாலகிருஷ்ணன் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதி அஞ்சலிக்காக வைத்திருந்தார். உறவினர்கள் அனைவருமே வந்து மாலதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னும் இரண்டு நாட்களுக்கும் மேலாக அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட மாலதியின் உடலைச் சுற்றி எப்போதுமே ஜெபம் செய்து கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மீது சந்தேகம் கொண்ட உறவினர்கள் சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, வெளியூரில் இருந்து உறவினர்கள் வர இருப்பதாகவும், அதனால்தான் அடக்கம் செய்யாமல் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மதுரை பட்டாசு ஆலையில் பெரும் விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!
இதை நம்பாத போலீசார், இப்போதே உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கூறியதையடுத்து, என் மனைவியின் உடலை நான் எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்.. இதில் யாரேனும் தலையிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி போலீசாரையே மிரட்டியுள்ளார்.
சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பாலகிருஷ்ணன், எந்நேரமும் ஜெபம் செய்து வந்த இவர்களுக்குள் ஆழமான பக்தி உண்டாகியிருக்கிறது. இதன் காரணமாக தங்கள் பிரார்த்தனை மூலம் இறந்து போன மனைவி மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே அடக்கம் செய்யாமல் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் எச்சரித்ததையடுத்து மாலதியின் உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்தனர்.
பக்தி இருக்கலாம் தவறில்லை, கூடவே கொஞ்சம் பகுத்தறிவும் வேலை செய்தால் நல்லது...
மேலும் படிக்க | காருக்குள் கிடந்த மண்டை ஓடு? ஏலத்தில் ஓலமிட்ட மக்கள்...