சாலை மறியலில் ஈடுப்பட்ட நொச்சிக்குப்பம் மக்கள்.... வாழ்வாதாரம் கேள்விகுறியாகிறதா?!!

சாலை மறியலில் ஈடுப்பட்ட நொச்சிக்குப்பம் மக்கள்.... வாழ்வாதாரம் கேள்விகுறியாகிறதா?!!

சென்னை மெரினா பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்தது என்ன?:

சென்னையின் மெரினா கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அங்குள்ள மீன் கடைகளை அகற்ற கோரி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.  அதனை எதிர்த்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

துணை மேயர்:

அதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தை அடுத்து மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக அங்கே வருகை தந்த  மாநகராட்சி துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.  மீனவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கும் மாநகராட்சிக்கும் இடையே சுமூகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதோடு மீனவர்களுக்காக நிரந்தரமாக ஒரு இடத்தில் மீன் விற்பனை கடைகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதுவரை இங்கே கடைகள் அமைக்கப்பட வேண்டாம்‌ என அறிவுறுத்தப்படிருந்த நிலையிலும் இந்த போராட்டத்தை மீனவ மக்கள் நடத்தி இருக்கிறார்கள் எனவும் சுமுகமான முறையில் பேசி முடிவெடுத்து மீனவர்களின் பிரச்சனை தீர்த்து வைக்கப்படுமென்று தெரிவித்துள்ளார் துணை மேயர் அப்துல் ரகுமான்.

மக்கள் கூறுவதென்ன?:

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில் இது போன்ற திட்டங்களை ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் சென்று நாங்கள் முறையிட்டு ஜெயித்திருக்கிறோம் எனவும் இப்போதும் அதே போல தொந்தரவுகளை அரசாங்கம் எங்களுக்கு கொடுக்கிறது எனவும் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  மாநகராட்சியும் அரசாங்கமும் இணைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முடிவெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை:

மேலும், அரசாங்கம் அதிவிரைவு சாலை கொண்டுவருவதற்காக வேண்டியே அவர்களுடைய சாலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றது எனவும் சென்னை மாநகராட்சி ஆணையம்  மீது அத்துமீறி நடந்து கொண்டதாகவும்  தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கான நடவடிக்கையை சீக்கிரம் எடுக்க வேண்டுமென்றும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.  அதனோடு வியாபாரம் பாதிக்காத வகையில் மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த வகையிலான திட்டங்களை நிறுத்த வேணடுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com