சாலையிலேயே ‘கரும்பு வழிபறியில்’ ஈடுபட்ட யானை...

வனப்பகுதியை விட்டு வெளியேறி, சாலையில் லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைக்கத் துவங்கிய யானையால் சிறிது நேரம் போக்குவரத்து பாத்திப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையிலேயே ‘கரும்பு வழிபறியில்’ ஈடுபட்ட யானை...

ஈரோடு | சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

குறிப்பாக ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து சாலையிலேயே காத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி இந்த திம்பம் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலும், இலகு ரக வாகனங்கள் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் இந்த சாலை வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து திம்பம் மலை பாதை வழியாக பாரம் ஏற்றுக் கொண்டு வரும் லாரிகள் ஆசனூரில் இரவு நேரத்தில் காரப்புள்ளம் சோதனைச் சாவடியில்  தடுத்து நிறுத்தப்படுவதால் லாரிகள் நீண்ட வரிசையில் காலை ஆறு மணி வரை காத்து நிற்கின்றன. இதனால் காலை 6 மணிக்கு அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுவதால் கடந்த சில நாட்களாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல வரிசையில் நின்று கொண்டிருந்த வாகங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதில், கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நின்ற போது, காட்டுப் பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒற்றை யானை லாரியில் கட்டப்பட்டிருந்த கரும்பு கட்டுகளில் இருந்து கரும்புகளை எடுத்து சுவைக்கத் துவங்கியது.

முதலில் பயந்த வாகன ஓட்டிகள், பின், அந்த யானையை தங்களது மொபைல்களை வைத்து படம்பிடிக்கத் துவங்கி விட்டனர். யானையோடு நின்று செல்ஃபீகள் எடுத்தும், அதனை போகும் வரை வீடியோ எடுத்தும் வாகன ஓட்டிகள் பகிர்ந்தனர்.

பின் சில நேரம் கழித்து காரப்பாளம் சோதனைச் சாவடியில் இருந்து வந்த வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதை தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லத் துவங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கருப்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com