ஐஐடி மெட்ராஸில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

ஐஐடி மெட்ராஸில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

ஐஐடி மெட்ராஸில் புதியதாக எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் எனும் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஐஐடி மெட்ராஸ் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான மையத்தின் (CODE) இணைத் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில் “மின்னணுப் பொருட்களின் உற்பத்தியால் இந்தியாவின் தேவை பூர்த்தியாவது மட்டுமின்றி, உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

பிஎஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பட்டதாரிகள் அடிப்படை அம்சங்கள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் மோட்டார் வாகனங்கள் நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் மொபைல் போன்கள் மருத்துவ மின்னணுப் பொருட்கள் பாதுகாப்புத் துறை போன்ற தொழில்களில் எலக்ட்ரானிக் அல்லது எம்பெடட் சிஸ்டம் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் என்ஜினியராக சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.

இதற்காக, மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப் படுவதாகவும், மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சிகளைப் பெற‌ முடியுமென்றும் தெரிவித்தார். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்களை தாண்டி மின்னணு சாதனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கான படிப்பை இந்த பாடத்திட்டம் விளக்குகிறது என தெரிவித்தார்.

600, 700 மாணவர்கள் முதற்கட்டமாக இந்த படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் இந்த படிப்பிற்கு மொத்தமாக 5 லட்சத்திற்கும் அதிகமாக செலவாகும் எனவும் தெரிவித்த அவர் இதில் 75% மாணவர்களுக்கு இலவச கல்வி ஊக்கத் தொகையும் அளிக்கப்படுவதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com