அரசு ஆசிரியர்களின் குழந்தைகள்...! "எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" அன்பில் மகேஷ்...!!

அரசு ஆசிரியர்களின் குழந்தைகள்...! "எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" அன்பில் மகேஷ்...!!

"அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில்
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,03,385 பேர். அதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 94.03% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 4,21,013 மாணவிகளில் 4,05,753 மாணவிகள் அதாவது 96.38% தேர்ச்சி அடைந்துள்ளனர். அது போல், தேர்வு எழுதிய 3,82, 371 மாணவர்களில் 3,49,697 மாணவர்கள் அதாவது 91.45% தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதி இருந்த ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவரும் தேர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றுள்ளன. 32,501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் சிறையிலிருந்து தேர்வெழுதிய 90 சிறைவாசிகளில் 79 சிறைவாசிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பார்க்கும் போது 97.85% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 97.79% மாணவர்கள் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடமும், 97.51% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாமிடம் பெற்றுள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் 96.45 % பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடமும், 95.9% பெற்று  பெரம்பலூர் மாவட்டம் இரண்டாமிடமும், 95.43 % பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

மேலும், இந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதாத குழந்தைகள் துணை தேர்வு எழுதுவதன் மூலம் இந்த ஆண்டில் உயர்கல்வியை தொடர முடியும் எனக்கூறிய அவர் வரும் 17 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாகவும் 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இது ஜனநாயக நாடு யார் எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு நாங்கள் சிறந்த படிப்பு கொடுக்க முயற்சி எடுப்போம்" எனக் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com