மாவீரன் படத்தில் கட்சிக்கொடி; தடைக்கோரிய IJK... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

மாவீரன் படத்தில் கட்சிக்கொடி; தடைக்கோரிய IJK... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

60 கோடி ரூபாய் செலவில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். சாந்தி டாக்கிஸ்  நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுதினம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் P.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.


 
படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, தங்களது இந்திய ஜனநாயக கட்சியின் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர் என் மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் V வெங்கடேசன் ஆஜராகி, சிகப்பு - வெள்ளை - சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியை படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

படத்தில் வரும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதால், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைப்பதாக அமைந்துவிடும் என்பதால், அந்த வண்ணங்களை மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றை மாற்றம் செய்யாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என டாக்டர் வி.வெங்கடேசன் வாதங்களை முன் வைத்தார்.

சாந்தி டாக்கீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் P S ராமன் ஆஜராகி,  படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை போன்றது இல்லை என்றும், இளம் காக்கி - மஞ்சள் - இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை என படத்தின் தொடக்கத்தில் பொறுப்பு துறப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்றும், படம் நாளை மறுநாள் 750க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகாவிட்டால் பெறுத்த நஷ்டம் ஏற்படும் எனவும் விளக்கம் அளித்தார்.

அப்போது இந்திய ஜனநாயக கட்சி தரப்பு வழக்கறிஞர் டாக்டர் வி.வெங்கடேசன் குறுக்கிட்டு, படத்தின் முன்னோட்ட காட்சிகள் குறித்த வீடிவோவை பார்க்கும்படி நீதிபதி மஞ்சுளாவிடம் வழங்கினார்.

அதை பார்த்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகள் என 40 விநாடிகள் என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

அதேசமயம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமெனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com