அமீருக்கு வலுக்கும் ஆதரவு...! - கரு.பழனியப்பன் அறிக்கை

அமீர் - ஞானவேல் ராஜா விவகாராம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கரு.பழனியப்பன், சிவக்குமார், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. 2007 ல் வெளியான ’பருத்தி வீரன்’ வெளியாகி 16 வருடம் ஆகியும் தொடரும் இந்த பிரச்சனை திடீரென தற்போது பெரிய அளவில் பேசப்படுவதற்கு காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ”கார்த்தி 25” விழா தான். கார்த்தியின் நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குனர் அமீர். ஆனால், ”கார்த்தி 25” நிகழ்ச்சியில் கார்த்தி பணியாற்றிய அனைத்து இயக்குனர்களும் வருகை தந்திருந்த நிலையில், அமீர் பங்கேற்கவில்லை.

அதன்பிறகு, இயக்குனர் அமீரிடம் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து கேட்ட போது, எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, பருத்தி வீரன் தொடர்பாக சமீபத்தில் ஞானவேல் கூறிய கருத்துக்களும் இந்த சர்ச்சைக்கு மிக முக்கிய காரணம்.

தயாரிப்பாளர் ஞானவேல் பேசியிருந்த கருத்துக்கள் வைரலான நிலையில், அவருக்கு எதிராக நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரகனி, நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் சுதா கொங்குரா, கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான சினேகன் என அடுத்தடுத்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிரான தனது கண்டனங்களை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொடுவதற்கு ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்தி வீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்” என்று தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், “நூறு குறள்கள் படித்த சிவக்குமார் “அல்லற்பட்டி ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளையும் படித்து இருப்பார்; அதனால், சிவக்குமார் ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என்றும், அதனை சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புவதாகவும் தனது அறிக்கையில் இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.

அமீர் - ஞானவேல் விவகாரத்தில் தொடர்ந்து இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்தியோ, நடிகர் சூர்யாவோ, நடிகர் சிவகுமாரோ இதுவரை எந்தவித கருத்துகளும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com