’ தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ : வீரப்பன் குறித்த வெப் சீரிஸில் தொடரும் விடையில்லாக் கேள்விகள்...!

’ தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’  : வீரப்பன் குறித்த  வெப் சீரிஸில்  தொடரும் விடையில்லாக் கேள்விகள்...!

இணையத் தொடராக நெட்பிளிக்ஸில் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் வீரப்பன் ஆவணத் தொடர், வெளியுலகத்திற்கு அறியப்படாத பல தகவல்களைக் கொடுத்தாலும், முக்கியமான கேள்விகளைக் கிளைக்கச் செய்து, அவற்றுக்கு தார்மீக பதில்களைக் கொடுக்க தவறியே முடிவடைந்திருக்கிறது. 

நெட்பிளிக்ஸில் அண்மையில் வெளியாகியுள்ள ’தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற இணையத் தொடர், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கதையைப் பேசுகிறது. 1989-ம் ஆண்டு தொடங்கி, 2004-ல் வீரப்பன் கொல்லப்படுவது வரையில் இருந்த தேடுதல் வேட்டையை 4 எபிசோடுகளில் சொல்லும் திரைக்கதையுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆண்டு கால கதையைக் கூறும் இந்தத் தொடரில் வெளியுலகம் அறியாத பல தகவல்களை படக்குழு அறியத் தந்திருப்பது ஒருபுறம் உண்மையே என்றாலும், பல்வேறு கேள்விகளையும் இத்தொடர் எழுப்புகிறது. 

உதாரணத்திற்கு, ஆயிரம் யானைகளை வீரப்பன் வெட்டி வீழ்த்தியதாக காட்டப்படுகிறது. அதில் ஆயிரம் யானைகளை ஒரே ஆள் கொன்றார் என்ற எண்ணிக்கை பெரும் கேள்வியை எழுப்புகிறது. இதைக்காட்டிலும், வீரப்பன் யானைத் தந்தங்களை யாருக்கு விற்றார்? அதை வெளியுலகத்திற்கு விற்ற இடைத்தரகர் யார்? அவற்றால் பலன் அடைந்தவர்கள் யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.

காட்டுக்குள் இருந்த அவர் யானைகளைச் சுட்டுக் கொன்றதாகவும், தந்தங்களை வெட்டியதாகவுமே இருந்தாலும், அதைக்கொண்டு நகரத்திற்குள் பயனடைந்தவர்கள் குறித்து இப்படம் எதுவும் பேசாதது  வெற்றிடத்தை மிச்சம் வைக்கிறது. இது, வீரப்பனை மட்டுமே குற்றவாளியாக சித்தரித்து மற்ற எவருக்கும் அதில் தொடர்பு இல்லாததுபோன்ற பிம்பத்தை இந்த ஆவணத்தொடர் ஏற்படுத்துகிறது. 

அதேபோல் சந்தன மரங்களை வெட்டி, ஒரு மலையையே மொத்தமாக வீரப்பன் சூறையாடியது போன்ற வசனங்களும், காட்சிகளும் அடிக்கடி காட்டப்படுகின்றன. அதிலும், கட்டைகளை வெட்டியதைக் கடந்து, யார் மூலமாக அவை விற்பனை ஆகின? எங்கெங்கெல்லாம் சந்தன மரங்கள் விற்கப்பட்டன என்பது போன்ற விவரங்களை வழங்க படக்குழு தவறிவிட்டது.

ஆயிரக்கணக்கான டன் மரங்கள் வெட்டப்பட்டதாக படத்தில் காட்சிப் படுத்தப்படும் நிலையில், ஒரு தனி மனிதனால் நாடு முழுவதிலும் எப்படி இத்தகைய விநியோகத்தை ஏற்படுத்தி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, இதன் பின்புலத்தில் இருந்த வியாபாரிகள், அவர்களை இயக்கிய அரசியல் கட்சிகள் யார் யார் என்ற கேள்விகளை இந்த ஆவணத்தொடர் கேட்க தவறிவிட்டது. 

வீரப்பனைப் பற்றி மட்டுமே தொடர்ச்சியாக பேசும் ஆவணத்தொடர், அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரின் அராஜகம் குறித்து அத்தனை அழுத்தமாக பேசவில்லை. போகிற போக்கில் ஒன்றிரண்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதே அன்றி, அதிரடிப் படையினரால் மலைவாழ் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையோ, பாலியல் வன்முறைகளையோ இந்த ஆவணப்படம் பேசவில்லை.

அழுத்தமான பதிவுகள் இடம்பெறவில்லை. வீரப்பனைக் குற்றவாளி என்று நிறுவுவதற்கான காட்சிகள் இருந்ததைப் போல், சிறப்பு அதிரடிப் படையினரின் அத்துமீறல்களை ஆணித்தரமாக காட்டும் காட்சிகள் வைக்கப்படவில்லை. ஒருவேளை ஹண்ட் ஃபார் வீரப்பன் என்று தொடருக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், படக்குழு வீரப்பனை மட்டுமே விரட்டி வேட்டையாடியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

அதேபோல், படத்தின் முடிவில் வீரப்பனின் இளம் கூட்டாளியாக இருந்து இப்போது சமூக ஆர்வலராக உள்ள அன்புராஜ் எழுப்பக் கூடிய கேள்விகள் மிக முக்கியமானவை. ஏன் வீரப்பன் உருவானான் என்கிற களச்சூழல் இன்னும் மாறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகவே தொக்கி நிற்கிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com