வலுக்கும் ஞானவேல் ராஜா- அமீர் விவகாரம்... வாய் திறப்பார்களா சிவக்குமார் குடும்பத்தினர்?

பருத்தி வீரன் படம் தொடர்பாகவும் இயக்குநர் அமீர் பற்றியும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் பேசிய கருத்துக்களுக்கு இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாடலாசிரியர் சினேகன் என பலரும்  கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினர்  இதுவரை வாய் திறக்காதது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பருத்தி வீரன். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றதோடு இயக்குநர் அமீர் , நடிகர் கார்த்தி என இருவருக்கும் அவர்களது திரைபயணத்தில் மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. 

இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக  சமீபத்தில் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா பேசிய கருத்துக்கள் தான் தற்போது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது . "யாரும் அமீரிடம் நேரடியாக சென்று பருத்திவீரன் படம் பண்ணி கொடுங்கள் என்று கேட்கவில்லை. 58 லட்சம் ரூபாய் கடனுக்காக தான் அவர் அந்த படந்தை எனக்கு எடுத்து கொடுத்தார்" என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி தரும் விதமாக இயக்குனர் அமீர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். 

“பருத்திவீரன்” தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.  

மேலும்  "பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்த திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட இந்த பிரச்சினையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அன்று நடந்த உண்மையை சொல்வதற்கு எனக்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது ஆனால் அது பலரின் வாழ்க்கையிலும் புயலை கிளப்பி விடும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், "பருத்திவீரன் இறுதிகட்ட படபிடிப்பிற்கான முழு தொகையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் . இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு" என இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் தெரிவித்திருந்தார்.

அதே போல், "உங்களை தயாரிப்பாளர் ஆக்குனது, கார்த்தியை ஹீரோ ஆக்குனது அமீர் தான். எந்த நன்றி விசுவாசமும் இல்லாமல் பேசியிருக்கீங்களே பிரதர் இது தப்பில்லையா.. எங்கிருந்து வந்தது இந்த தைரியம் ... இந்த மாதிரி பொதுவெளியில் தப்பு தப்பா பேசுவதை இதோட நிறுத்திகோங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது" என  நடிகரும் இயக்குனருமான சமுத்ரகனியும் ஞானவேல் ராஜாவை கண்டித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

மேலும், "ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. "என்று இயக்குனர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர்.

மேலும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக நடிகர் பொண்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக  திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க  உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என கவிஞர் ஸ்நேகன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

சினிமா துறையில் எப்போதெல்லாம் சர்ச்சைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் தனது கருத்தை பகிரங்கமாக பதிவு செய்து வருபவர் நடிகர் சிவக்குமார். இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய கருத்துக்களுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் பட்சத்தில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த யாரும் இது வரை வாய் திறக்கவில்லையே என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் கங்குவா படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.