தவறி விழுந்த 9000 ஆயிரம் கோடி; மிரட்டல் விடுத்த வங்கி!

சென்னையில், கார் ஓட்டுனர் ஒவரின் வங்கிக் கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், வாடகை கார் ஓட்டி வருகிறார். இவரது, வங்கி கணக்கிற்கு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இதனைக் கண்டு குழப்பம் அடைந்த ராஜ்குமார், அது உண்மைதானா என்பதை அறிய, தனது நண்பர் கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் இது உண்மை என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்த நிலையில் மீதமிருந்த தொகை அனைத்தையும், மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. அத்துடன், தவறுதலாக பணம் போடப்பட்டுவிட்டது என்றும், எடுத்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டத்தில் மிரட்டல் விடுத்த வங்கி நிர்வாகம், பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப செலுத்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக சமரசம் செய்து அனுப்பியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com