ஜம்மு-காஷ்மீரில் ஆசிரியர்கள் 2 பேரை சுட்டுக் கொலை... பயங்கரவாத செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்...

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆசிரியர்கள் 2 பேரை சுட்டுக் கொலை... பயங்கரவாத செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்...

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில்  ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குள் புகுந்த  2  பயங்கரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு   அங்கிருந்து தப்பியோடி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த இடத்தை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.  மேலும் காயமடைந்த இரண்டு ஆசிரியர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இந்தநிலையில்  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பண மதிப்பிழப்பு, சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை, நிறுத்தப்படவும் இல்லை. என்றும், இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.