நிலக்கரி தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் என்ன..?  உற்பத்தியை பெருக்க தனிக்குழு...

நிலக்கரி தட்டுப்பாட்டுக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, அதன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. 

நிலக்கரி தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் என்ன..?  உற்பத்தியை பெருக்க தனிக்குழு...

மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அதனை முறையே பயன்படுத்தும்படி கடந்த அக்டோபர் 8ம் தேதி மத்திய மின்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மின் உற்பத்திக்கென 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் கூறியது. இதனிடையே கொரோனாவுக்கு பின் மீண்டும் பொருளாதாரத்தை பெருக்கும் நோக்கில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியிருப்பதால், மின் உற்பத்திக்கான நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது என ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் குறைகூறின. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதப்பட்டது. மேலும் தங்களுக்கென கூடுதலாக நிலக்கரி ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்தநிலையில் இந்த திடீர் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக நிலக்கரி சுரங்கங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இறக்குமதி நிலக்கரிக்கான விலையும் அதிகரித்துள்ளதால், மாநிலங்கள் உள்ளூரிலேயே நிலக்கரி கொள்முதல் செய்து கொள்வதாகவும், இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொருளாதாரம் மீண்டும் மீளத்தொடங்கியிருப்பதால், மின் உற்பத்தி தேவை அதிகரித்துள்ளது எனவும், மழைக்காலத்தை முன்னிட்டு, நிலக்கரியை போதுமான அளவு சேகரித்து வைக்காதும் ஒரு காரணம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த தட்டுப்பாட்டினை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிலக்கரி அமைச்சகம் தலைமையில் அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி இருப்பு நிலவரத்தை வாரத்திற்கு இருமுறை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.