பாடகி வாணி ஜெயராம் உள்பட...106 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு...!

பாடகி வாணி ஜெயராம் உள்பட...106 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு...!

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 106 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. 

106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு :

கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன. அதன்படி இந்த ஆண்டும் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 106 பேரின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் மற்றும் 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி. சடையன் ஆகிய இருவரும் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், மறைந்த முன்னாள் உத்ரபிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருதும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, இந்தி நடிகை ரவீனா டான்டன் மற்றும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருதும், தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசைனுக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாகீர் உசைனுக்கு கடந்த 1988-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2002-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக மேற்குவங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஓ.ஆர்.எஸ்., கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com