முகமது நபி குறித்து சர்ச்சை பேச்சு.. நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்!!

முகமது நபி குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
முகமது நபி குறித்து சர்ச்சை பேச்சு.. நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்!!

நுபுர்சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு தொழுகைக்கு பின்னர் டெல்லி ஜிம்மா மசூதி முன்பு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர்சர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் போராடி அப்புறப்படுத்தினர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலிசார் மீது கற்களை வீசி தாக்கிய வன்முறையாளர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

இதில் 11 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறை கட்டுப்படுத்தினர், இந்த தடியடியில் 12 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இதனிடையே அப்பகுதியில் இணையசேவை துண்டிக்கப்பட்டதுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.  இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக அம்மாநிலத்தில் 136பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு வரும் 13ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹவுரா பகுதியில் கடும் போராட்டம் தீவிரமடைந்த அங்கிருந்த பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனிடையே முகமது நபியை அவதூறாக பேசிய நுபுல் சர்மாவை தூக்கிலிட வேண்டுமென அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர், இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஆந்திரா, கர்நாடாக, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்க்ள் திரளாக வந்து போரட்டம் நடத்தினர். 

இந்நிலையில் போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com