இலங்கையில் ஊரடங்கு அமல்.. மக்கள் கடும் அதிருப்தி.. சமூக வலைதளங்கள் முடக்கம்!!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களை இரு நாட்டு அரசுகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இலங்கையில் ஊரடங்கு அமல்.. மக்கள் கடும் அதிருப்தி.. சமூக வலைதளங்கள் முடக்கம்!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் தொடர் மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  

இந்தநிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் நிர்வாக திறமையின்மையே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறி  உள்ளூர் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தவிர ராஜபக்சேவுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகளும் விலக்கி கொண்ட நிலையில், எதிர்கட்சிகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு நாளை காலை 6 மணி வரை அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. மேலும் அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதை தவிர்க்க சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக தொடர் ஊரடங்கை அறிந்ததும், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதிகளில் அலைமோதியதால் கூட்டநெரிசல் காணப்பட்டது.

இதனிடையே இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் மில்லியன் டன் டீசல், 40 ஆயிரம்  டன் அரிசி ஆகியன அந்நாட்டை சென்றடைந்தது. இதனை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அரசு, உடனடியாக விநியோகத்தை துவங்கியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 50 நாட்களில் மட்டும் இலங்கைக்கு இந்தியா சார்பில் 2 லட்சம் மில்லியன் டன் டீசல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக 624 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com