போலி முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எம்.பிக்கு கடும் உடல்நல பாதிப்பு,..விசாரணை கோரி பாஜக போராட்டம்.! 

போலி முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எம்.பிக்கு கடும் உடல்நல பாதிப்பு,..விசாரணை கோரி பாஜக போராட்டம்.! 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற போலி கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான மிம்மி சக்ரபோர்த்தி கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக, அந்நகரின் காஸ்பா பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கும் சென்ற மிம்மி சக்ரபோர்த்தி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். எனினும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிபடுத்துவதற்கான குறுந்தகவல் எதுவும் வராத நிலையில் சந்தேகமடைந்த அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அது போலி முகாம் என்பதை உறுதி செய்து தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்த டெபன்ஜான் என்பவரைக் கைது செய்து போலி தடுப்பூசிகளை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு இடத்தில் இதேபோன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது தெரியவந்தது.  

இந்நிலையில் போலி தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மிமி சக்ரவர்த்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது குறித்து தேசிய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டுமென அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.