தள்ளு தள்ளு தள்ளு; பி ஆர் டி சி யின் அவலநிலை!

தள்ளு தள்ளு தள்ளு; பி ஆர் டி சி யின் அவலநிலை!

காரைக்கால்: காரைக்காலில் அரசு பேருந்து பாதியில் நின்றதால் பயணிகள் பேருந்தை, பேருந்து நிலையத்திற்குள் தள்ளி வந்து நிறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும் பொதுத்துறை வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் புதுச்சேரியில் மாநில அரசு போக்குவரத்துக் கழகமான பி ஆர் டி சி யின் 22 பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில்,  காரைக்காலில் இயக்கப்பட்ட 30 பேருந்துகளில் 14 பேருந்துகள் பல்வேறு காரணங்களால் இயங்காத நிலையில் உள்ளது. 16 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதை தெரிகிறது. 

இந்நிலையில் இன்று காரைக்காலில் இருந்து அம்பத்தூர் செல்லும் பி ஆர் டி சி நகர பேருந்து, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த சிறிது தூரத்திலேயே பழுதாகி நின்றது. ஓட்டுநர் பல வகையில் முயற்சித்தும், பேருந்தை இயக்க முடியாததால், பயணிகள் இறங்கி தள்ளி மறுபடியும் பேருந்து நிலயத்தினுள்ளேயே ஓரம் கட்டி நிறுத்தியுள்ளனர்.

பயணிகள் பேருந்தை தள்ளிய காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இணையவாசிகள், நடிகர் வடிவேலுவின் பிரபல நகைச்சுவை வசனத்தை வைத்து, பி ஆர் டி சி நிர்வாகத்தை கேலி செய்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், பி ஆர் டி சி நிர்வாகம் அவலநிலையில் இருப்பதாகவும், புதுச்சேரி அரசு இதனைக் கருத்திற்கொண்டு, பி ஆர் டி சி நிர்வாகத்தை முறைப்படுத்த கோரிக்கைகள் வைத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com