புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல்... பிரதமர் மகிழ்ச்சி!

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல்... பிரதமர் மகிழ்ச்சி!

இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமா் மோடி தொிவித்துள்ளாா். 

இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில், பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது. டெல்லியில் அதிகார பரிமாற்றத்திற்கான விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லியில் இன்று திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்துள்ளனர்.

தொடா்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார். அப்போது பேசிய பிரதமா் மோடி, இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்த செங்கோல் நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என தொிவித்தாா்.

தொடா்ந்து பேசிய அவா், "சுதந்திரத்திற்குப் பிறகு புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான இடத்தை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த பவனில் கைத்தடியாக வைக்கப்பட்டு இருந்தது" எனவும் குறிப்பிட்டாா்.  

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 21 ஆதீனங்களும் பங்கேற்றனா். மேலும் மத்திய நிதி அமைச்சா் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com