பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானது...!

பீகார் மாநிலத்தில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி, மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27 புள்ளி 13 சதவீதமும் உள்ளனர். அட்டவணைப் பிரிவு மக்கள் 19 புள்ளி 65 சதவீதமும் பழங்குடியின மக்கள் 1 புள்ளி 68 சதவீதமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தினர் 81 புள்ளி 99 சதவீதமும், இஸ்லாம் மதத்தினர் 17 புள்ளி 7 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com