இந்தியா - இலங்கை தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அறிக்கை...!

இந்தியா - இலங்கை தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அறிக்கை...!

இலங்கையில் உள்ள பௌத்த சுற்று, ராமாயணப் பாதை மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களின் புராதன இடங்களை மேம்படுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் டெல்லியில் இருதரப்பு மற்றும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின்படி புதிய உயர்கல்வி மற்றும் திறன் வளாகங்களை நிறுவுதல் உட்பட இருதரப்பு கல்வி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஆராய இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

விவசாயம், மீன்வளர்ப்பு, தகவல் தொழில்நுட்பம், வணிகம், நிதி மற்றும் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் மருத்துவம், பூமி மற்றும் கடல்சார் அறிவியல்,விண்வெளி பயன்பாடுகள், வரலாறு, கலாச்சாரம், மொழிகள், இலக்கியம் போன்ற பரஸ்பர நலன்கள் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு நில அணுகலை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பல்லாண்டு பழமையான உறவை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக இரு நாட்டிற்கிடையே நில இணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு இடையிலான உறவுகள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கொழும்பு வரை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இணக்கம் காணப்படுவதாக இரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிவில் விமானப் போக்குவரத்தில் முதலீடு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com