கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா...

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள வழிவிடும் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா...

ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில்களில் ஒன்றான அருள்மிகு வழி விடு முருகன் திருக்கோவிலில்  ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 82 ஆண்டுகளாக  சிறப்பாக நடைபெற்று வருகிறது.  10 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் வைபவம்  இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

கணபதி பூஜை, ஹோமம்  நடத்தப்பட்டு    கலசங்களில் புனித நீர்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு  பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மூலவர் வழிவிடு முருகனுக்கு சிறப்பு  அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு    சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள்  நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து வழிவிடு முருகனுக்கு  தீப ஆராதனைகள் நடைபெற்று காப்பு கட்டும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து  பங்குனி உத்திர விழாவில் பால்குடம் காவடி எடுக்க நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள்  காப்பு கட்டிக்கொண்டனர்.

கடந்தாண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காப்பு கட்டி நேர்த்திகடன் செலுத்தியதாகவும் இந்தாண்டு மேலும் அதிகரிக்கும் என கோவில் தர்மகர்த்தா ஜெயக்குமார் தெரிவித்தார். தினசரி வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும் மாலையில் சண்முகர் அர்சணை, ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி பங்குனி உத்திர பெருவிழா நடைபெறும் அன்றைய தினம் நொச்சி வயல் ஊரணி கரையிலிருந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து  நேர்த்திக்கடனை செலுத்துவர்.

அன்று இரவு 7 மணிக்கு  கோவில் முன்பாக பூக்குளி உற்சவம் நடைபெறும். மறுநாள் உற்சவ  வழிவிடு முருகன் வண்ணமலர்கள் ,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வர இசையுடன் வீதி உலா நடைபெறும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com