தெலுங்கானாவில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 36 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா  ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவைத் தவிர பிற மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்து விட்டது.

இறுதியாக 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சிந்தமதகா வாக்குச் சாவடியிலும் ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய் எஸ் சர்மிளா,  ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா  ஹைதராபாத்திலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் பர்கத்புரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியிலும், சந்திரசேகர ராவின் மகளான கவிதா பஞ்சாரா ஹில்ஸ் வாக்குச் சாவடியிலும், ஐதராபாத்தில் அசாதுதீன் ஓவைசியும், கொடாங்கலில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் ரேவந்த் ரெட்டியும் வாக்களித்தனர். 

திரைப்பட நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் , நாகர்ஜூனா, நாக சைத்தன்யா, அமலா, கீரவாணி உள்ளிட்டோரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 

தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக மற்றும் ஆளும் பிஆர் எஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய வாக்குப் பதிவுக்காக 35 ஆயிரத்து 655 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 50 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நக்சலைட்டுகள் பாதிப்புகள் உள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

இதனிடையே  ஜங்கான் வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப் பதிவின் போது காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்காக ஹைதராபாத்தில் ஜன்னல் வழியே பேருந்தில் ஏறி இடம் பிடித்து சென்றனர். பேருந்தில் இடமில்லாததால் மேற்கூரை மேல் அமர்ந்து சென்று ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்நிலையில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 36 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com