தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 40 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 40 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சை

தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, ஜி.ஜி. மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா மதியாஸகேன், கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் 2013 ம் ஆண்டு மே மாதம் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி அதற்கு லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

அதன்பின், அடிவயிறு வலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஃப்ளோரா, மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ஒப்புதலைப் பெறாமல் இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பின், மெட் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அப்போது தான், அவரது பெருங்குடலில் சேதம் ஏற்படுத்தப்பட்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட ஃப்ளோரா, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜி.ஜி. மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க |மீண்டும் உண்ணா போராட்டம் அறிவிக்கும் ஆசிரியர்கள் : காரணம் என்ன?

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், ஜி.ஜி.மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என ஜி.ஜி.மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகைக்கு, வழக்கு தொடரப்பட்ட 2014 ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.