பாஜகவின் வெற்றிக்கு அதிமுக முக்கியம்... அமித் ஷாவிற்கு விளக்கிய தம்பிதுரை!!!

பாஜகவின் வெற்றிக்கு அதிமுக முக்கியம்... அமித் ஷாவிற்கு விளக்கிய தம்பிதுரை!!!

அதிமுக உடனான கூட்டணி தேவையில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

தம்பிதுரை சந்திப்பு:

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவின் எம்.பியான தம்பிதுரை டெல்லி சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று அவர் பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை என அண்ணாமலை பேசியதை குறித்து விவாதித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.  அவர்களின் முழுமையான உரையாடல் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
 
அண்ணாமலை கூறியதென்ன?:

சமீபத்தில் பாஜக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக  எந்த திராவிட கட்சிகளோடும் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் பாஜக-வை மேம்படுத்துவதற்கான திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.  மேலும் அவர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் அதனை செய்ய முடியும் எனவும், தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும் எனில் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் பேசியிருந்தார்

சலாம் போடமாட்டேன்:

தொடர்ந்து பேசிய அவர், திட்டம் குறித்து செயல்பட  அவருக்கு உரிய சுதந்திரம் வேண்டும் எனவும் அதனால் தான் அவர் மேனேஜர் இல்லை, தலைவன் எனக் கூறியதாகவும் பாஜக இனி  திராவிடக் கட்சிகளோடு சேர்ந்து தேர்தல்களை சந்திக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.  மேலும் யாருக்கும் சால்வை போர்த்தி சலாம் போடமாட்டேன் எனவும் அதிமுக -வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு தேசிய தலைவர் கூறினால் தனது பதவியை ராஜினாமா  செய்வேன் எனவும் கூறியிருந்தார்.   அதனோடு பாஜக மாநிலத்தலைவர் என்ற முறையில் கட்சி கூட்டணி குறித்த முடிவை  மே மாதம் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

சந்திப்பில் நடந்தது என்ன?:

இவரின் இந்த  பேச்சு அப்போதே பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியிருந்த நிலையில் அமித் ஷாவுடனான தம்பிதுரையின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

மன்னிக்க மாட்டார்கள்:

அந்த சந்திப்பில் நீங்களும் அதிமுக பொதுச்செயலாளரும் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் தலைவரான அண்ணாமலை மட்டும் ஏன் அனைத்து பொது கூட்டங்களிலும் அதை மறுத்து வருகிறார் என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.  மேலும் அண்ணாமலை இவ்வாறு கருத்துகளை தெரிவித்து வந்தால் அதிமுகவும் அதன் தொண்டர்களும் எவ்வாறு பாஜகவிற்காக பணி செய்ய முடியும் எனவும் அண்ணாமலையின் கூற்றுகளை ஒருபோதும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் எழுதப்பட்ட...:

அரசியலில் உறுதியான வாக்குறுதிகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வாக்குறுதிகள் தான் அதிகம் என அண்ணாமலை பேசியிருந்ததை குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறியது தாங்கள் அதிமுகவுடனான கூட்டணி குறித்து கூறியதையா அல்லது எதைக் குறித்து அவர் பேசியுள்ளார் எனவும் அதிமுக சார்பில் கேள்வியெழுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க:   ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு சமம் ...! உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை...!!