சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா,
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில், 21 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
கந்துவட்டிகாரர்கள் போல் சுங்கச்சாவடிகள் வசூல் செய்வதாகவும், தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,
தமிழகத்தில் கூடுதலாக இருக்கும் 32 சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.