இருமடங்கு உயர்வை கண்ட வாழைப்பழம், வாழை இலை!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்களின் தேவை அதிகரித்தால் விலை கூடியுள்ளது. இதனால் வாழை பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வருடம் பருவமழை பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள முக்கிய வேளாண் விவசாய பயிர்களான நெல், வாழை உள்ளிட்ட விவசாய பெயர்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ள சூழலில், தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய விவசாய தொழிலான வாழை விவசாயம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, வாழைப் பழங்களின் உற்பத்தியானது குறைந்த அளவிலே காணப்பட்டு வரும் நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தி விழாவானது நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சூழலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விநாயகருக்கு பூஜை செய்வதற்காகவும், விழாவின்போது பயன்படுத்துவதற்காகவும் முக்கிய பொருளாக வாங்கப்படும் வாழைப்பழங்களும், வாழை இலைகளும் தற்போது இருமடங்காக விலை உயர்ந்துள்ளது.

 குறிப்பாக, தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் நாள்தோறும் மாலை நேரத்தில் நடைபெறும் வாழைபழங்கள் ஏலம் விடும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

குறிப்பாக, விலை அதிகமாக இருந்த போதும் தேவையின் காரணமாக வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்ற நிலையில், வாழைப்பழங்களின் விலையும் அதிகரித்த காணப்பட்டன.

 குறிப்பாக, வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கற்பூரவல்லி பழங்கள் தார் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கும், மட்டி வாழைப்பழம் 600 ரூபாய்க்கும், கதலி வாழைப்பழம் 500 ரூபாய்க்கும், நாட்டு வாழைப்பழம் 650 ரூபாய்க்கும், கோழிக்கோடு பழம் ரூபாய் 500க்கும், சக்கை வாழைப்பழம் 600 ரூபாய்க்கு, ரோவஸ்டா 400க்கும் விற்பனையானது.

அதேபோல் 600 முதல் 800 வரை விற்பனை செய்யப்படும் செவ்வாழை தார் ஒன்றுக்கு 1200 முதல் 1400 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.  அதேபோல் வாழை இலைகளும் இரு மடங்கு விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!