"தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது” : சென்னை உயர் நீதிமன்றம் .

"தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது” : சென்னை உயர் நீதிமன்றம் .

சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைகழகத்திற்கு வழங்கிய அரசு நிலத்தை  மீட்கும் தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1985ல் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் நல அறக்கட்டளை தரப்பில் சென்னை போரூர் அருகே மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்காக 269 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது.  1989ல் கல்லூரியையும், சொத்துகளையும் அரசு எடுத்துக்கொண்ட நிலையில், அந்த மருத்துவ கல்லூரியை மூன்று வருடங்களுக்கு பிறகு நிகர்நிலை பல்கலைகழகமாக மத்திய அரசு அறிவித்தது.

1990ல் அறக்கட்டளைக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு அறக்கட்டளை விற்றது. அதில் ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனம், அந்த நிலத்தை அடமானம் வைத்து கனரா வங்கியிடம் வாங்கிய 500 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாததால், அதனை வாராக்கடனாக அறிவித்து, சர்ஃபாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 42 ஏக்கர் நிலம் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது.

இவ்வாறு வாங்கிய  நிலத்தை  மீட்க அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, எஸ்.சி.எம். சில்க்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது.  அதன் மனுவில், சர்ஃபாசி சட்டத்தில் விற்கப்பட்ட சொத்து என்பதால் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி வாங்கியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில்,  நிலத்தை மீட்க முடிவெடுத்துள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை என்றும், வழக்கு முன்கூட்டி தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் நிறுவனத்தின் கடன் பரிவர்த்தனைகளுக்கும், வங்கி எடுத்துள்ள நடவடிக்கைக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றும், அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு காரணமாக பொது சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, அதன்காரணமாக ஏற்படும் நிதி இழப்பு ஆகியவற்றை தீவிரமாக கருத வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள் கவனத்திற்கு வரும்போது அரசும் விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க    | நீர் பாசன வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீரின்றி காயும் 1000 ஏக்கர் குறுவை பயிர்கள்; விவசாயிகளே தூர்வாரும் அவலம்..!