குன்னூர் விபத்து; பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த 54 பேர் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் சொந்த ஊர் திரும்பிய போது குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் அருகே 50 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்   காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம்   ரூபாயும் அறிவித்துள்ளார்.

இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் நிதியுதவி அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத் துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கினார். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

குன்னூர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு  மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார். மூதாட்டி ஒருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க: வலுப்பெரும் எடப்பாடி கூட்டணி