டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!

தொடர்ந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் டிடிஎஃப் வாசன் மீது வருவதால் ஜாமின் மனு நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

பிரபல யூடூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். இதில் கை முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டு வரும் அக்டோபர் 3- தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அன்றே ஜாமீன் கேட்ட நிலையில் ஜாமீன் மனுவை நீதிபதி இனிய கருணாகரன் தள்ளுபடி செய்தார். இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் கை முறிவு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் கேட்டு வந்த மனு மீது வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் டிடிஎப் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வரும் நிலையில் அவருக்கு இரண்டு நாட்களிலேயே ஜாமீன் வழங்க முடியாது என கூறி, வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்காமல் மாவட்ட நீதிபதி செம்மல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்?