பிரதமரின் சென்னை வருகையையொட்டி...ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

பிரதமரின் சென்னை வருகையையொட்டி...ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை யொட்டி, தலைநகர் சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'வந்தே பாரத் விரைவு ரயில்' சேவை மற்றும் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதைதொடர்ந்து, ஏப்ரல் 9-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர், ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியினரை சந்தித்து பேச உள்ளார். 

இதையும் படிக்க : விரைவில் மதுரையில் மெட்ரோ பணி...நிர்வாக இயக்குனர் அறிவிப்பு!

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், விவேகானந்தர் இல்லம் மற்றும் பல்லாவரம் என பிரதமர் பயணிக்கும் இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமரின் வருகையையொட்டி நீலகிரியில் வெள்ளிக் கிழமை முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.