இனி சென்னை வரும் அரசு பேருந்துகள்...தாம்பரம் வழியாகவே கோயம்பேடு செல்லும்...!

இனி சென்னை வரும் அரசு பேருந்துகள்...தாம்பரம் வழியாகவே கோயம்பேடு செல்லும்...!

தாம்பரம் வழியாகவே இனி அனைத்து அரசுப் பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. 

பொதுமக்கள் பயணிக்கும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது, பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம், வடபழனி வழியாக கோயம்பேடு வராமல், பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் வழியாக சென்னை  கோயம்பேடு சென்றடைகிறது. இதனால் சென்னை நகருக்குள் வசிக்கும் பயணிகள் முன்கூட்டியே இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டு, அங்கிருந்து மாற்று பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கும்  சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், வழக்கமாக சென்னைக்கு வரும் பேருந்துகள், காலை 7 மணி வரை தாம்பரம் வழியாகவும், அதையடுத்து வரும் பேருந்துகள் மதுரவாயல் வழியாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க : லஞ்சம் கேட்ட இபிஎஸ் ஆதரவாளர்...வீடியோ வெளியிடுவதாக எச்சரித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஆனால், அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக கோயம்பேட்டை நோக்கி இயக்கும்போது குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன், வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசுப் பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் எனவும், மாலை 5 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியே கோயம்பேட்டை அடையலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.