”கூடுதல் நீர் திறக்கக்கோரி, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தும்” - துரைமுருகன்!

தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீரை திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு அக்டோபர்  30-ம் தேதி வரை 15 நாட்களுக்கு விநாடிக்கு மூவாயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இது தொடர்பாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிலைபாடு குறித்து எடுத்துரைக்க உள்ளார். 

இதையும் படிக்க : ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீரை திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக கூறினார். அத்துடன், தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரைப் பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் கூறினார். 

இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவையில்,  முதலமைச்சர் கொண்டு வந்த காவிரி நீர் தொடர்பான, தனித் தீர்மானம்,  ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், தீர்மானத்தின் நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.